தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிரபல பெங்காலி நடிகர் சவுமித்திர சட்டர்ஜி(85) உடல்நலக் குறைவால் காலமானார்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் 1935ம் ஆண்டு, ஜன., 19ல் பிறந்தவர் சவுமித்திர சட்டர்ஜி. சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் ஆரம்பகாலங்களில் மேடை நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் ‘அப்பூர் சன்சார்’ என்ற படம் மூலம் பெங்காலி சினிமாவில் நடிகராக றிமுகமானார். உலகின் புகழ்மிக்க இயக்குநர்களில் ஒருவராக கொண்டாடப்படும் சத்யஜித்ரே இயக்கிய சாருலதா, ஆரண்ய தீன் ராத்திரி, கணசத்ரு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
பெங்காலி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக திகழ்ந்த இவர், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(நவ., 15) அவரது உயிர் பிரிந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ”நரம்பியல் பிரச்னை உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்ட சவுமித்திர சட்டர்ஜிக்கு தீவிர சகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்று(நவ., 15) மதியம் 12.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது” என தெரிவித்துள்ளது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பத்மபூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார் சவுமித்திர சட்டர்ஜி. சினிமா துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் கடந்த 2012ம் ஆண்டு பெற்றார்.
சவுமித்திர சட்டர்ஜி மறைவுக்கு இந்திய திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனால் அவரின் மறைவுச் செய்தி தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.