தமிழ் சினிமாவில் 37 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘முந்தானை முடிச்சு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஊர்வசி. அதன்பின் எத்தனையோ படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
நடிகர்களில் கமல்ஹாசன் என்றால் நடிகைகளில் ஊர்வசி என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு தான் எடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களில் அவருடைய நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும். சகலகலாவல்லி என்றும் பெயர் பெற்றவர்.
இடையில் சில காலம் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. ஆனால், இப்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் தனது அற்புதமான கதாபாத்திரங்களில், அருமையான நடிப்பு மூலம் அதிகம் பேசப்படுகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவின் அம்மாவாகவும், நேற்று வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அம்மாவாகவும் நடித்துள்ளார். இரண்டு படங்களிலும் அம்மா கதாபாத்திரம்தான் என்றாலும் இரண்டும் வெவ்வேறு விதமான குணாதிசயம் கொண்டவை. இரண்டிலுமே ஊர்வசியின் நடிப்பு ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.