நேற்று ஆரம்பமாகிய ஜப்பான் அணுகுண்டு தாக்குதலின் 71ஆவது நினைவு தின நிகழ்வு
லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலிகொண்ட ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலின் 71 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமாகின. இந்நிகழ்வில் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய நேரமான காலை 8.15 மணிக்கு அமைதி மணி ஒலிக்கப்பட்டது. இதன்போது நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அமைதியாக இருந்து உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவு சதுக்கத்தில் நடந்த குறித்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மேயர் கசுமி மத்சுயி உட்பட பலர் அங்கு மலர் வளையங்களை வைத்து தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அங்கு மேயர் கசுமி மத்சுயி மக்கள் மத்தியில் உரையாற்றும்பொழுது, ‘அணுகுண்டினால் பாதிப்புக்குள்ளான அனுபவத்தினை பெறுவதற்காக அனைத்து நாடுகளின் தலைவர்களும் ஹிரோஷிமா, நாகாசாகி நகருக்கு வருகை தர வேண்டும் என்று நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு உரையாற்றிய பிரதமர் ஷின்சோ அபே ‘அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியதை போல் அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க உலக நாடுகளின் தலைவர்கள் முன்வரவேண்டும், அதற்கான முதல் படியை இன்று எடுத்து வைப்போம்’ என்று தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த மே மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.