அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டியாகோ பிராந்தியத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், குடியரசு கட்சி ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் டொனால்ட் டிராம்பின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் வரும் நவெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் 7ம் தேதி கலிபோர்னியாவில் அதிபர் வேட்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மேற்கு கலிபோர்னியாவின் சாண்டியாகோவில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. அப்போது டிரம்ப் பேசிக்கொண்டிருந்த வேளையில், திடீரென கூட்டத்தில் எதிர்ப்பாளர்கள் கற்கள் மற்றும் போத்தல்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் சில பொருட்கள் பொலிஸார் மீதும் விழுந்துள்ளது. இந்த நிலையில், கலகத்தினைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எவ்வாறான போதும், மோதல் தொடர்பாக 35 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டிரம்புக்கு எதிராக கடந்த 3 நாட்களில் நடைபெற்ற 2வது மோதல் இதுவாகும். முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை நியூமெக்சிகோ பகுதியில் நடைபெற்ற கூட்டத்திலும் வன்முறை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.