சோமாலியா நாட்டில் காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆப்ரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகதிசுவில் நேற்று அரசு அலுவலகம் அருகேயுள்ள கடை முன்பு கார் ஒன்று நின்றிருந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எவ்வித இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும், அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஷெபாப் இன்ற இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்கொய்தா ஆதரவு பெற்ற ஷெபாப் இயக்கம் இதுபோன்ற தாக்குதலை அடிக்கடி நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாசவேலையில் ஈடுபடுகிறது.கடந்த 2011ம் ஆண்டு முதல் சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளுக்கு ஷெபாப் அமைப்பு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. தீவிரவாதிகளை ஒடுக்க சோமாலியா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தபோதிலும் தாக்குதல்கள் தொடர்கிறது