யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சந்தேகநபர் யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபராக அடையாளங்காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் யாழ். நீதவான் முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் தடயங்களை காண்பிப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.