பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘நெடுமி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் பேரரசு வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் நந்தா லட்சுமணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் படைப்பு ‘நெடுமி’. இதில் புதுமுக கலைஞர்கள் ப்ரதீப் செல்வராஜ், அபிநயா, ஏ.ஆர். ராஜேஷ், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகர் ராஜசிம்மன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஸ்வா மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜாஸ் ஜே.பி இசையமைத்திருக்கிறார்.
பனை மரமேறும் மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த படத்தை ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசு சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
படத்தை பற்றி இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசுகையில்,
“குறும்படங்கள், இசை அல்பங்களை இயக்கியதை தவிர சினிமா பற்றி வேறு எதுவும் தெரியாத எங்களுக்கு, வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நன்றி.
பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த சமூக செயற்பட்டாளர் கவிதா காந்திக்கு நன்றி.
‘நெடுமி’ என்றால் பனைமரத்தைக் குறிக்கும் சொல். இது சங்க இலக்கியத்தில் இருக்கிறது. குழுவாக ஒன்றிணைந்து நெடுமியை உருவாக்கியிருக்கிறோம். இந்த படம் அனைவரையும் கவரும் என நம்புகிறோம்” என்றார்.
இதனிடையே ‘பனை மரம்’ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு சொந்தமான ஒன்றல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்குச் சொந்தமானது. பனையின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்பது இந்தப் படத்தை பார்த்தால் தெரியும்.
சின்ன படம் என்றாலும், நடிப்பாலும் சொல்லப்படும் விடயத்தாலும் இந்தப் படம் உயர்ந்து தரமான படமாக இருக்கிறது என்ற எண்ணத்தை திரையுலக வணிகர்களிடம் பரவி வருவதால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.