சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்கவும், அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதற்கான கொள்கைகளை வகுக்கவும், அதனை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு அமைச்சரவையில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கொழும்பில் ஆரம்பமான சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய 20 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் மங்கள உரையாற்றினார். சட்டவிரோத பண பரிமாற்றத்தையும், பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதையும் தடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 41 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு எதிர்வரும் நாளை நிறைவடையவுள்ளது.