புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தடுப்பு காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும், பிரதான சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரும், நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், வித்தியா படுகொலை வழக்கில் தடுப்பு காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு குற்றவியல் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே, நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை மாலை யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளும் ட்ரயல்அட் பார் தீர்ப்பாய முறையில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.