ஆபாச வார்த்தைகளால் வசைபாடுபவர்களிடம் இருந்து ஆவணப்பட இயக்குநர் திவய்பாரதியை பாதுகாக்கக் கோரி மகளிர் அமைப்பு டிஜிபியிடம் மனு அளித்துள்ளது. ‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திவ்யபாரதி. இவரது படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை குறிப்பிட்டு காட்சிகள் உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பிரச்னையை கிளப்பினார். இதனையடுத்து பெண் என்றும் பாராமல் ஆபாச அர்ச்சனைகளை திவ்யபாரதி மீது பலர் தொடுத்து வருகின்றனர்.
தனக்கு பல்வேறு கொலைமிரட்டல்கள் தொலைபேசியில் வருவதாகவும், புதிய தமிழகம், பாஜகவினர் என்று சொல்லியே அதிக மிரட்டல்கள் வருவதாகவும் திவ்ய பாரதி கூறியிருந்தார். இந்நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் திவ்யபாரதிக்கு தொடர்ந்து தொலைபேசியிலும், சமூக வலைதளத்திலும் மோசமான வார்த்தைகளை பகிர்ந்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திவ்யபாரதிக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.