மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் என்றோ ஒருநாள் மாவட்டத்திற்குள் கம்பீரமாக நுழையும் பொழுது பிரச்சனைக்குரிய சமூகமாக மாறப்போவது தமிழ் முஸ்லிம் உறவுகள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஹிதாயத் நகர் பகுதியில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (21) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஐக்கிய தேசிய கட்சி இந்த வருட இறுதிக்குள் உள்ளுராட்சி சபைத் தேர்தலை தொகுதி வாரியாக எழுபது வீதமும், பிரதேச வாரியாக முப்பது வீதமாக நடாத்த வேண்டும் என அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாண சபை உரிய காலத்தில் கலைக்கப்பட வேண்டும்.
மாகாண சபை கலைக்காமல் இருக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டு வருவதன் மூலம் தான் அதனை நீட்டுவதா என்கின்ற விடயம் சொல்ல முடியும்.
தற்போதைய நடவடிக்கையின் பிரகாரம் மாகாண சபையின் காலத்தை நீடிப்பது கிடையாது என்றும் தெரிவித்தார்.
வாழைச்சேனை மீராவோடை பகுதியில் நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட காணி விடயத்தை பூதாகரமாக்கி மட்டக்களப்பு தேரரை அந்தப் பகுதிக்கு மக்கள் வரவழைத்து நீதி, நியாயம் கேட்கின்ற நடைமுறை வட கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று சொன்னால் இரண்டு சமூகத்திற்கும் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தும், நிம்மதியாக வாழ முடியாது என்பது என்னுடைய கருத்தாகும்.
பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் தான் தமிழ் பேரும் சமூகம்.
அவர்கள் கற்றுக் கொண்ட பாடம், கடந்த காலத்தில் எதிர்நோக்கிய நஷ்டங்கள், துன்பங்கள் என்ற விடயம் அந்த தரப்பினரால் இன்னுமொரு இனத்தவருக்கு ஏற்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.
வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற சந்தர்ப்பம் இல்லை என்று சொன்னால் காவியுடை தரித்தவர்கள் எமக்கு நீதிபதியாக வருவார்கள் அவ்வாறு வரும்போது நாம் ஒன்றுபடுவதை அவர்களில் சிலர் விரும்பவும் மாட்டார்கள்.
வடக்கில் இடம்பெயர்ந்த ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதன் மூலம் தான் வடபுலத்திலுள்ள தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியப்படும் என்பதும், எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவைப்பற்றி பேசுவதற்கு தயாராக இருக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் தமிழ் மக்கள் விட்டுக் கொடுப்புடனும் வாழ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.