கம்போடியாவில் வசிக்கிறார் கிம் ஹாங் என்ற 74 வயது பெண்மணி. இவரது கணவர் டோல் குட் ஒரு வருடத்துக்கு முன்பு திடீரென்று இறந்துவிட்டார். அந்த இழப்பை கிம் ஹாங்கால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார். இறுதியில் ஒரு சாமியாரிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார். ‘உங்கள் வீட்டில் மாடு கன்று போடும்போது, உன் கணவரே கன்றாகப் பிறப்பார். கவலை வேண்டாம்’ என்று கூறினார் அந்தச் சாமியார். கிம் நம்பிக்கையுடன் இருந்தார். கடந்த மார்ச் மாதம் மாடு கன்று ஈன்றது. அதை நன்றாகக் கவனித்துக்கொண்டார். “நான் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கணவர் கன்று ரூபத்தில் மீண்டும் என்னிடம் வந்துவிட்டார். கன்று என் கைகளையும் கழுத்தையும் நாக்கால் தடவும். என் தலை மீது தலை வைத்துக்கொள்ளும். சில நேரங்களில் முத்தமிடவும் செய்யும். இப்படிப் பல விஷயங்கள் என் கணவர் செய்வதைப் போலவே செய்கிறது. அதற்குப் பிறகுதான் எனக்கு முழுமையான நம்பிக்கை வந்தது. கன்று வடிவத்தில் இருக்கும் என் கணவரை வீட்டுக்குள்தான் வைத்திருக்கிறோம். இதற்காக வீட்டைச் சற்றுப் பெரிதாகக் கட்டிவிட்டோம். கணவரின் புகைப்படங்களுக்கு அருகே ஒரு பெரிய படுக்கையை விரித்து, அதில் அவருக்குப் பிடித்த தலையணையை வைத்திருக்கிறோம். இதில்தான் கன்றும் நானும் படுத்துக்கொள்வோம். என் குழந்தைகள், பேரன் பேத்திகள், உறவினர்களுடன் அன்பாகப் பழகும். எல்லோருமே கணவருக்குக் கொடுத்த அதே மரியாதையையும் அன்பையும் கன்றுக்கும் கொடுக்கிறார்கள்” என்று நெகிழ்கிறார் கிம் ஹாங். 5 மாதக் கன்று இன்று கம்போடியாவின் பிரபலமாக மாறிவிட்டது. கன்றுக்குட்டியைப் பார்ப்பதற்காக கிம் வீட்டுக்கு மக்கள் செல்வது அதிகரித்திருக்கிறது.
தமிழ்த் திரைப்படங்களை விஞ்சிவிடும் போலிருக்கே!
சீனாவின் குவாஞ்சி மருத்துவமனையில் 45 வயது சென்னுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, 200 கற்களை நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தார் சென். ஒருமுறை மருத்துவரிடம் சென்றபோது, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. பித்தப்பை, கல்லீரலில் உள்ள கற்களை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்றார்கள் மருத்துவர்கள். பயந்து போன சென், உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிட்டார். தற்போது வலி தாங்க முடியாமல் போகவே, அறுவை சிகிச்சைக்கு வந்தார். “இவ்வளவு கற்கள் சாதாரணமாக உருவாவதற்கு வாய்ப்பில்லை. சென் சாப்பிடும் உணவு பழக்கத்தால் இந்தக் கற்கள் உருவாகியிருக்கலாம். இவர் பைன் மரங்களின் விதைகளைச் சேகரிப்பவர். காலை உணவை முற்றிலும் தவிர்த்து வந்திருக்கிறார். நேரம் தவறி சாப்பிட்டதால் பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டன. அளவுக்கு அதிகமான கொழுப்பும் கால்சியமும் படிகங்களாக மாறிவிட்டன. உணவைத் தவிர்க்கவும் கூடாது, அவசரமாகவும் சாப்பிடக் கூடாது. பித்தப்பை கல் பிரச்சினை சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகம் ஏற்படுகிறது” என்கிறார் மருத்துவர் க்வான் ஸுவெய்.