பெருந்தோட்ட மக்களிடத்தில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனது அமைச்சினூடாக பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையகம் 2020 ஆம் ஆண்டளவில் பாரிய மாற்றத்தைக் காணும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுகாதார மற்றும் சுதேசிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், பெருந்தோட்டங்களில் அதிகளவில் பெண்களே அதிக நேரம் தொழில் புரிவதாகவும், இவர்களுக்கு சரியான அளவில் போசாக்கு இல்லாமையினால் பிறக்கும் குழந்தைகளுக்கு மந்தபோசனம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் லயத்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனிவீடுகள் அமைத்துக்கொடுத்து காணி உறுதியும் வழங்கி பாதைகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டினார்.