கூட்டு எதிர்க் கட்சிக்குள் பிளவுகள் இல்லையெனவும் அதனை எவரும் பிரிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்துள்ள கட்சிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் அவர்களின் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப தீர்மானங்களை எடுத்துச் செயற்பட்டு வருகின்றனர்.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஏதாவது ஒரு கட்சி அரசியலமைப்பு சபையிலிருந்து விலகிவிட்டது என்பதற்காக கூட்டு எதிர்க் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுவிட்டது என்று அர்த்தம் கொள்வது தவறானது.
தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியை எவரும் விரும்பும் விதத்தில் உடைத்துவிடவோ, பிளவுபடுத்தவோ முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.
நெருப்பு இல்லாமல் புகை வராது என்பார்கள். கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போகின்றார்கள் என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதியுடன் உள்ள சிலர் கூட்டு எதிர்க் கட்சிக்கு செல்லப் பார்க்கின்றார்கள் என்பது போலவே, கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இணைய பேச்சுக்கள் நடைபெறுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கருத்தைக் கூறியுள்ளார் என்பது அரசியல் பார்வையுள்ள எவருக்கும் புரியாத புதிரல்ல.