ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக தோல்வியுற்று கட்சியையும் அரசாங்கத்தையும் அபகீர்த்திக்குள்ளாக்காமல் தனது அமைச்சர் பதவியை அமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்வதே சிறந்தது. இதற்கான பணிப்பை பிரதமர் வழங்கவேண்டும் என ஐ. தே. க. முக்கியஸ்தர்கள் பலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேவேளை, தனது பதவியை இராஜினாமா செய்யாமல் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க முகம் கொடுத்தால், அதற்கு ஆதரவளிக்கக் கூடாதென்று உறுதியான நிலைப்பாட்டில் சஜித் பிரேமதாச, ஹரீன் பெர்னாண்டோ, இரான் விக்கிரமரட்ண, ஹர்ஷ டீ சில்வா, அஜித் பீ பெரேரா, நிரோஷன் பெரேரா உட்பட மேலும் பல அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ரவி கருணாநாயக்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யாவிட்டால், அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கும்படி ஜனாதிபதியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்கவும் இக் குழுவினர் தயராகி வருவதாக தெரியவருகிறது. இதேவேளை இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரம் ஒதுக்கித் தரும்படி சில ஐ.தே.கட்சி முக்கியஸ்தர்கள் கேட்டபோது, ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் ஆஜரான பின்னர் நேரம் ஒதுக்குவதாக பிரதமர் வாக்குறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கடந்த 3 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 32 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். இருந்தும், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினருமா மஹிந்த ராஜபக் ஷ கைச்சாத்திடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜிதஹேரத் எம்.பி தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கட்சியின் முடிவின்படி வாக்களிக்க வேண்டுமென ஐ.தே.க கட்சி வலியுறுத்தினால் பல ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தினத்தன்று பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்க ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி ரவி கருணாநாயக்க தொடர்ந்து அமைச்சரவை அமைச்சராகவிருப்பது அரசாங்கத்துக்கும் அதேபோல் ரவி கருணாநயக்கவுக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துமென ஜனாதிபதி அவருக்கு அறிவித்துள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எனவே அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதிவியிலிருந்து இராஜினாமா செய்வதே இதற்கு நல்ல தீர்வாக அமையுமெனவும் ஜனாதிபதி அவருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு தெரிவாகி 40 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அலரிமாளிகையில் கடந்த 3 ஆம் திகதி இரவு நடைபெற்ற இராப் போசன விருந்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை பதவி விலகும்படி தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை பதவி விலகும்படி ஜனாதிபதி கூறியதாக வந்த செய்திகள் வதந்தி எனவும் அவை அர்த்தமற்ற செய்திகள் எனவும் அவர் ஆங்கிலப் பத்தரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.