தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு,தண்டப்பணம் விதிக்கபபட்டு விடுதலையான பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீம் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் வெள்ளிக்கிழமை (26) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது இரு தரப்பினரும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டுக்குள் சட்டவிரோமாக தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வந்து குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தண்டப்பணம் செலுத்தி விடுதலையாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளதால் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அவர் மீது கடும் ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளதுடன்,தேவையேற்படின் அலி சப்ரி ரஹீம் மீதான கடும் நடவடிக்கை கோரி 223 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும்,அவர் கட்சி தலைவர் கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்கேற்காததால் அவரிடம் இவ்விடயத்தை கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சபை முதல்வரான,அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆளும் மற்றும் எதிர் கட்சிகளுக்கு உறுதியளித்துள்ளார்.