ஒரிசாவில் கடந்த மே மாதம் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், ‘பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பா.ஜ.க ஆட்சி’ என்று தீர்மானம் நிறைவேற்றினர். 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா 95 நாள்கள் சுற்றுப் பயணம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. காஷ்மீரில் இருந்து பயணத்தை தொடங்கிய அமித்ஷா, மே 10-ம் தேதி சென்னை வர திட்டமிட்டு இருந்தார். சென்னை, கோவை, மதுரை என்று அவரது பயணம் தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது திடீரென்று ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பூத் கமிட்டி வேலைகளை முடித்த பிறகு அவர் தமிழகம் வருவார் என்று பின்னர் டெல்லி தலைமை அறிவித்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அவர் மூன்று நாள்கள் இருக்கிறார். கட்சியைப் பலப்படுத்தவும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றியைத் தேடித்தரவும் என்னென்ன செய்யப்பட்டுள்ளது. என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்ய இருக்கிறார் அமித்ஷா. தொண்டர்களின் வீடுகளுக்கு விசிட், கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியான சந்திப்பு மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கோவை, மதுரை ஆகிய இடங்களிலும் அவரை அழைத்து வர வேண்டும் என்று மாநிலத் தலைவர் தமிழிசையிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ”ஆகஸ்ட் 22, 23, 24 என்று மூன்று நாள்களுக்கு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பணியில் தமிழக பா.ஜ.க ஈடுபட்டுள்ளது” என்று தமிழிசை கூறினார்.