கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் யோசனையை ஆதரித்து நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவித்திருந்த போதிலும், தினேஷ் குணவர்தனவின் யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
யாதேனும் உள்ளூராட்சி மன்றத்திற்குள் அமைந்துள்ள யாதேனுமொரு அரச நிறுவனத்தில் பணிபுரிவதை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்னதாக முடித்துக் கொள்ளாத யாதுமொரு நபருக்கும் அந்த உள்ளூராட்சி மன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்க முடியாது என்ற திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்திருந்தது.
எனினும், இதற்கு எதிரான திருத்த யோசனையொன்றை தினேஷ் குணவர்தன முன்வைத்திருந்தார். இதனால் சபையில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து தினேஷ் குணவர்தனவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு காணப்படும் சந்தர்ப்பம் நீக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் தொடர்பான திருத்தங்களை குழுநிலையில் அங்கீகரிக்கும் போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியிருந்தார்.

