வடக்கு மாகாணத்தில் இளைஞர்களுக்காக உருவாக்கப்படவுள்ள இளைஞர் கொள்கையானது சுகாதாரம், கல்வி, தொழில்முயற்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்தால் பலமானதாக அமையும் என்று பல தரப்பினரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர் என மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது.
வடக்கு மாகாணத்தில் இளைஞர்களின் தேவைகளை இனம் கண்டு அதனை நிறைவேற்றக் கூடிய பொதுவான கொள்கை ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கு அனைத்துத் தரப்பினரையும் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம்திகதி அழைத்து தீர்மா னிக்கப்பட்டது.
இதன்போது 15-–29 வயதுடையவர்களை இளைஞர்களாகக் கருதி இளைஞர் கொள்கையைத் தயாரித்து இதன் மூலம் இளைஞர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யமுடியும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நடப்பு ஆண்டில் இளைஞர் கொள்கையை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொள்கையின் கல்விசார்ந்த விடயங்களில் தரம் 9 கல்வியின் ஆரம்பத்தில் தொழிற்கல்வியைக் கற்பிக்க ஆரம்பித்தல் வேண்டும்.
கிராமிய மட்டத்தில் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும். வாரத்தில் ஒருநாள் ஆன்மிக நிகழ்வுகளை நடத்துதல் வேண்டும். இளைஞர்களின் திறனை வளர்த்துகொள்ள வள நிலையங்கள் உருவாக்கப்படல் வேண்டும் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரம் சார்ந்த விடயங்களில் இனவிருத்திக் கல்வியை மேம்படுத்த வேண்டும். போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளில் இளைஞர்களை உள்வாங்க வேண்டும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தொழில்முயற்சி சார்ந்த விடயங்களில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். பாடசாலையை விட்டு விலகியவர்களுக்கு தொழிற்பயிற்சி சான்றிதழ்களை வழங்க உள்வாங்குதல், போராளிகள், விதவைகளுக்கு உதவுதல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இளைஞர் கொள்கை அமைய வேண்டும் என்று பலரும் பரிந்துரைகளை மு ன்வைத்துள்ளனர் – என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

