ஒருநாள் போட்டிகளில், இந்த ஆண்டு அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனை படைக்க காத்திருக்கிறார் கோஹ்லி.
இந்திய கேப்டன் கோஹ்லி, மூன்றுவித கிரிக்கெட்டிலும் அசத்துகிறார். டெஸ்ட்(60 போட்டி, 4658 ரன்), ஒருநாள்(190 போட்டி, 8339 ரன்), ‘டுவென்டி–20’யில்(49 போட்டி,1748 ரன்) அசைக்க முடியாத வீரராக திகழ்கிறார். இந்த ஆண்டு இவருக்கு மிகவும் ராசியானதாக அமைந்தது. சாம்பியன்ஸ் டிராபி பைனல் வரை அணியை அழைத்துச் சென்றார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று வரலாறு படைத்தார்.
தேவை 45 ரன்:
அடுத்து, இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 82 ரன்கள் விளாசிய இவர், தொடரை வெற்றியுடன் துவக்கினார். இந்த ஆண்டு அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலி்ல் முதலிடம் பிடிக்க இவருக்கு இன்னும் 45 ரன்களே தேவைப்படுகிறது. இப்பட்டியலில் தென் ஆப்ரி்க்காவின் டுபிளசி(814 ரன்) முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட்(785) இரண்டாவது இடத்தில் உள்ளார். கோஹ்லி(769) மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதில், சிறந்த சராசரி (96.1) இவரது வசமே உள்ளது. இலங்கை தொடரில் மீதம் 4 போட்டிகள் இருப்பதால், முதலிடத்திற்கு கோஹ்லி முன்னேறுவது உறுதி.
நீடிக்க வாய்ப்பு:
இங்கிலாந்து அணி செப்.19 வரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. தென் ஆப்ரிக்காவோ அக்., 15 வரை ஒருநாள் அரங்கில் விளையாடவில்லை. இதனால் முதலிடத்தில் அதிக நாட்கள் கோஹ்லி நீடிக்கலாம்.
‘சேஸ்’ கில்லாடி:
இந்திய அணி ‘சேஸ்’ செய்யும் போது ‘விரட்டு மன்னன்’ என்பதை தொடர்ந்து நிரூபிக்கிறார் கோஹ்லி. கடைசியாக ‘சேஸ்’ செய்த 5 போட்டிகளில் இங்கிலாந்து(122) தவிர்த்து மற்ற அணிகளுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா(76*), வங்கதேசம்(96*), வெஸ்ட் இண்டீஸ்(111*), இலங்கைக்கு(82*) எதிராக அவுட்டாகாமல் இருந்தார். இந்த 5 போட்டிகளில் மட்டும் 487 ரன்கள் குவித்துள்ளார்.
யார் ‘டாப்’
ஒருநாள் அரங்கில் இந்த ஆண்டு அதிக ரன் எடுத்துள்ள டாப்–5 வீரர்கள்.
வீரர் போட்டி ரன் சராசரி சதம் அரைசதம்
டுபிளசி(தெ.ஆ) 16 814 58.14 2 5
ஜோ ரூட்(இங்கி.,) 14 785 71.36 2 5
கோஹ்லி(இந்தியா) 14 769 96.12 2 6
மார்கன்(இங்கி.,) 15 752 53.71 3 3
குயின்டன்(தெ.ஆ.,) 16 669 41.81 1 6
