பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்க, சீன தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் சீனாவில் இருந்தாலும், அவை சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை பெரிய அளவில் ஜொலித்ததில்லை. சர்வதேசத் தொடர்கள் சிலவற்றில் சீன கிரிக்கெட் அணிகள் பங்கேற்றிருந்தாலும், இதுவரை வெற்றியைப் பதிவு செய்ததில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) விளையாட சீன கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அந்த அணி வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று சீன கிரிக்கெட் அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. பி.எஸ்.எல். தொடரில், நடப்பு சாம்பியனான பெஷாவர் ஜால்மி அணிக்காக அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளனர். அந்த அணியின் தலைவர் ஜாவேத் அஃப்ரிடியின் பெய்ஜிங் பயணத்தின்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம் போலவே, பாகிஸ்தான் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை சீனாவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் வைக்கப்பட்டுள்ளாதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல் தொடரைப் போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படுவது பாகிஸ்தான் சூப்பர் லீக். இந்தத் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுடன், பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

