சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி, இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரில் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில், ஹாம்ஷைர் அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி, 7 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உதவியுடன் 43 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதிப் போட்டியான அதில், அஃப்ரிடியின் சதத்தின் உதவியால், ஹாம்ஷைர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.
உள்ளூர் தொடரில் ஹாம்ஷைர் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 250 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெர்பிஷைர் அணி 148 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 101 ரன்கள் வித்தியாசத்தில் ஹாம்ஷைர் அணி வெற்றிபெற்றது. 20 பந்துகளில் அரை சதமடித்த அஃப்ரிடி, 65 ரன்கள் குவித்தபோது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இந்தத் தொடரில், மிடில் ஆர்டரில் களமிறங்கி வந்த அஃப்ரிடி, ரன் குவிக்கத் தடுமாறினார். இந்த நிலையில், காலிறுதிப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய அஃப்ரிடி 42 பந்துகளில் சதமடித்தார்.

