கொழும்புவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் தவண் விக்கெட்டுக்குப் பிறகு இலங்கைப் பந்து வீச்சு கோலி, ரோஹித் சர்மா இருவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.
டாஸ் வென்று பேட் செய்ய முடிவெடுத்த விராட் கோலி, தவன் விக்கெட்டுக்குப் பிறகு இறங்கியது முதல் அனாயசமான பவுண்டரிகளை துச்சமாக அடித்து விளாசி 76 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் கண்டார், தற்போது 80 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் என்று ஆடி வருகிறார். கோலி அடிக்கும் 29-வது ஒருநாள் சதமாகும் இது.
இவருடன் ரோஹித்சர்மா 67 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 78 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இந்திய அணி 26-வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில் கோலி, ரோஹித் சர்மா கூட்டணி 24.2 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 194 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெர்ணாண்டோவை முதலில் ஒரு ராஜகவர் டிரைவ் பிறகு சக்தி வாய்ந்த மிட் ஆஃப் டிரைவ், அதன் பிறகு நகர்ந்து கொண்டு லெக் திசையில் சக்தி வாய்ந்த பிளிக் என்று 3 பவுண்டரிகளுடன் தொடங்கினார் கோலி. பிறகு பெர்ணாண்டோவை அடுத்த ஓவரிலும் மிட் ஆஃபில் புல்லட் ஷாட் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டி மீண்டும் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு லெக் திசையில் மணிக்கட்டு பிளிக் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டினார்.
புஷ்பகுமாரா பந்து வீச வந்தவுடன் நடுவர் உடல் தப்பிய நேர் பவுண்டரி ஒன்றையும், பிறகு குசால் மெண்டிஸ் மிஸ் பீல்ட் செய்ய பந்து கவர் பவுண்டரிக்கும் பறந்தது. மலிங்கா ஆப் கட்டராக வீசியவர் திடீரென ஒரு பவுன்சரை வீச அதனை முறையாக பவுண்டரிக்கு அனுப்பினார் கோலி. 11வது ஓவரில் கோலி 38 பந்துகளில் அரைசதம் கண்டார், இதே 38 பந்துகளில் இன்னொரு 50 ரன்களை எடுத்து 76 பந்துகளில் சதம் கண்டார் விராட் கோலி.
முன்னதாக… டாஸ் , அணி விவரம்:
கொழும்புவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.
ரோஹித் சர்மா 3 ரன்களுடனும், கோலி 15 ரன்னுடனும் ஆடுகின்றனர். 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் களம் கண்டுள்ளார், இன்னும் ஒரு ஸ்டம்பிங் செய்தால் 100 ஸ்டம்பிங்குகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.
ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவண், பெர்னாண்டோ வீசிய பந்து சற்றே லேட் ஸ்விங் ஆக தவண் அதனை பாயிண்டில் ஒரு சுழற்று சுழற்றினார், ஆனால் பந்து டீப் தேர்ட்மேனுக்கு வேகமாகப் பறந்து சென்றது, அங்கு புஷ்பகுமாரா அருமையான கேட்ச் எடுத்தார்.
இந்திய அணி வருமாறு:
ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ராகுல், மணீஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்குர்.
இலங்கை அணி:
மலிங்கா (கேப்டன்), பெர்னாண்டோ, டிக்வெல்லா, முனவீரா, மெண்டிஸ், திரிமானே, மேத்யூஸ், சிறிவதனா, டிசில்வா, தனஞ்ஜயா, புஷ்பகுமாரா

