அனில் கும்ப்ளே வீழ்த்திய 619 விக்கெட்கள் சாதனையை நெருங்கினாலே சிறப்பான விஷயம். 618 விக்கெட்களை நான் கைப்பற்றினால் அதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கும் சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, சமீப காலமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத அவர், தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் கூறியிருப்பதாவது:
ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேனா அல்லது எனக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் இடத்தில் நான் இல்லை. அணி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் எனக்கு கிடையாது.
என்னை பொறுத்தவரையில் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளேன். எனக்கான வாய்ப்பு கிடைத்தால் அதில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். இதுவரை நான் செயல்பட்டதைவிட கூடுதலாக கவனம் செலுத்தி எனது திறமையை வளர்த்துக் கொள்வேன். என்னால் அதை மட்டும்தான் சிறப்பாகச் செய்ய முடியும். மற்ற படி அணி விவகாரங்களில் நான் எதுவும் செய்ய முடியாது.
நான், அனில் கும்ப்ளேவின் தீவிர ரசிகன். கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நான் 618 விக்கெட்களை வீழ்த்தினாலே பெருமையாக கருதுவேன். அதுவே எனது கடைசி போட்டியாக அமைந்துவிடும். இலங்கை அணியின் ரங்கனா ஹெராத்தும் எனக்கு முன் மாதிரியாக விளங்கக்கூடிய வீரர்களில் ஒருவர். அவர் ஒரு அற்புதமான பந்து வீச்சாளர் என்றே கருதுகிறேன்.
வயது ஒரு தடையில்லை என்பதை அவர் நிருபித்துள்ளார். ஒவ்வொரு நாளும் தனது திறனை மேம்படுத்தி வருகிறார். அவர் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர் என்பதை தனது ஆட்டத் திறனால் நிருபித்து வருகிறார். நெருக்கடிகளை தனது முன்னேற்றத்துக்காக சிறந்த முறையில் பயன்டுத்தக் கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இதைத்தான் அவர் செய்தார்.