ஜெய்ப்பூரில் நடைபெறும் பவேர்சிங் டி20 உள்ளூர் டி20 தொடரில் திஷா கிரிக்கெட் அகாதமிக்காக ஆடிய 15 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சவுத்ரி 4 ஓவர்களில் ஹாட்ரிக் சாதனையுடன் ரன்னே கொடுக்காமல் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
திஷா கிரிக்கெட் அகாடமிக்காக ஆடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சவுத்ரி, பேர்ல் அகாடமி அகாடமிக்கு எதிராக 4 ஓவர்கள் 4 மெய்டன்கள் 10 விக்கெட்டுகள் என்று அசத்தி அந்த அணியை 36 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.
இந்த டி20 தொடரை உள்ளூர்வாசி ஒருவர் தனது தாத்தாவின் நினைவாக நடத்தியுள்ளார்.
முதலில் திஷா அகாடமியை பேட் செய்ய அழைத்தது பேர்ல் அகாடமி, திஷா அகாடமி 20 ஒவர்களில் 156 ரன்களை எடுத்தது. பேர்ல் அகாடமி இலக்கை விரட்டும்போது இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சவுத்ரி முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் பிறகு 2 மற்றும் 3வது ஓவரில் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்ப்ற்றி, பிறகு தனது கடைசி ஓவரில் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரன் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
2002-ல் பிறந்த ஆகாஷ் சவுத்ரி ராஜஸ்தான் – உ.பி.எல்லையில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

