அமெரிக்காவை அலறவிட்ட ‘தனி ஒருவன்’!

அமெரிக்காவை அலறவிட்ட ‘தனி ஒருவன்’!

எஃப்பிஐ எனப்படும் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ( The Federal Bureau of Investigation – FBI) உலகின் முன்னணி துப்பறியும் நிறுவனங்களுள் ஒன்று. குற்றங்களைத் தடுக்கும், குற்றவாளிகளை விரட்டிப் பிடிக்கும் ‘அமெரிக்கக் கழுகு’. ஆனால் இந்த பிரம்மாண்ட ஜாம்பவானின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய ‘தனி ஒருவன்’ இருக்கிறான். அதுவும் சும்மா இல்லை. 45 ஆண்டுகளாக. பெயர் – டி.பி. கூப்பர்.

யார் இந்த கூப்பர்?

நவம்பர் 1971. அமெரிக்கர்களில் பாதி பேர் பசி மயக்கத்திலும், மீதி பேர் உண்ட மயக்கத்திலும் இருந்த மதிய நேரம். போர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்தான் அவன். கருப்பு சூட், பளீர் வெள்ளை சட்டை, கசங்காத டை போன்றவைதான் அந்தகால ஜென்டில்மேன்களின் டிரஸ்கோட். அங்கிருந்து சியாட்டில் செல்வதற்கு ‘டான் கூப்பர்’ என்ற பெயரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு Boeing 727-100 விமானத்தில் ஏறினான்.

நாற்பதுகளில் வயது, ஆறடி உயரம், அலட்டல் இல்லாத ஸ்டைல் என சந்தேகமே பட முடியாத தோற்றம் அவனுடையது. மதியம் 2.50-க்கு விமானம் டேக் ஆஃப் ஆனது. அவனைத் தவிர்த்து 36 பயணிகள். அடுத்த சில நிமிடங்களில் பணிப்பெண் ஃப்ளாரன்ஸ் ஸ்காப்னரை அழைத்த அவன், ஒரு துண்டுச்சீட்டை நீட்டினான். வழக்கமாக போன் நம்பர் கேட்டு வழியும் ஆட்களில் ஒருவன் போல என நினைத்த ஃப்ளாரன்ஸ், அந்த துண்டுச் சீட்டை பிரித்துக் கூட பார்க்கவில்லை. ‘அதை நீங்கள் பிரித்துப் பார்ப்பது நல்லது’ என மெல்லிய குரலில் சொன்னான் கூப்பர். புருவங்கள் உயர மடிப்பை பிரித்தவளை, ‘வணக்கம். நான் இந்த விமானத்தை கடத்தப் போகிறேன். ஹீரோயிசம் வேண்டாம். என்னிடம் வெடிகுண்டுகள் இருக்கின்றன’ என்ற வரிகள் வரவேற்றன. அதிர்ச்சியில் கூப்பரைப் பார்க்க, அவன் அலட்டிக் கொள்ளாமல் தன் ஃப்ரீப்கேஸை திறந்தான். அதில் நெருக்கியடித்தபடி வெடிகுண்டுகள் ஜம்மென அமர்ந்திருந்தன.

ஹை அலர்ட்!

மொத்த தேசத்தின் பிளட் பிரஷரும் எகிறியது. ‘ஒற்றை ஆள் அத்தனை பாதுகாப்பையும் மீறி ஒரு விமானத்தைக் கடத்தியிருக்கிறானே’ என பிதுங்காத விழிகளே இல்லை. ஆனால் பல்லாயிரம் அடி உயரத்தில் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் கூப்பர். கண்களில் புதிதாக ‘கூலர்ஸ்’ முளைத்திருந்தது. அவனுடைய டிமாண்ட் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் – ரேண்டம் சீரியல் எண்களோடு, நான்கு பாராசூட்டுகள், அப்புறம் சியாட்டிலில் விமானம் தரையிறங்கும்போது மீண்டும் பறக்க வசதியாக டேங்க் நிறைய எரிபொருள்.

5.39-க்கு சியாட்டிலில் விமானம் தரையிறங்கியது. பணமும், பாராசூட்டும் அவனிடம் ஒப்படைக்கப்பட்டன. கூப்பர் சொன்னபடியே பயணிகளை விடுவித்தான். எஞ்சியிருந்தது 2 பைலட்கள், ஒரு விமான பணிப்பெண், ஒரு என்ஜினியர் என 4 பேர்தான். எரிபொருள் நிரப்பும் நேரத்தில், தன் திட்டத்தை பைலட்டுகளிடம் விவரித்தான் கூப்பர். விமானம் மெக்ஸிகோ நோக்கி பத்தாயிரம் அடி உயரத்தில், 120 மைல் வேகத்தில் பறக்க வேண்டும். விமானத்தின் இறக்கைப் பகுதி 15 டிகிரி கீழ்நோக்கியிருக்க வேண்டும். வழியில் நெவாடா மாகாணத்தில் 2-வது முறை எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் என பக்காவாக திட்டமிட்டு வைத்திருந்தான் கூப்பர்.

us1

இரவு 7.40 மணிக்கு விமானம் மெக்ஸிகோ கிளம்பியது. பின்னாலேயே மூன்று ராணுவ விமானங்கள் கிளம்பின. கூப்பரின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒன்று போயிங்கிற்கு நேர் மேலேயும், ஒன்று நேர் கீழேயும் பயணித்தன. கொஞ்சம் தூரம் இடைவெளிவிட்டு மற்றொன்று. விமானத்தில் எல்லாரையும் காக் – பிட்டிற்குள் அனுப்பினான் கூப்பர். ‘வெளியே வரக்கூடாது’ என செல்ல மிரட்டல் வேறு. இரவு 8.13 மணிக்கு விமானத்தின் பின்பக்கத்தில் சட்டென எடை குறைந்ததை உணர்ந்தார்கள் விமானிகள். 10.15 மணிக்கு நெவாடாவில் தரையிறங்கியபோது கூப்பர் விமானத்தில் இல்லை.

வரலாற்றின் மிகப்பெரிய மேன்ஹன்ட்!

‘கூப்பர் எப்படித் தப்பித்திருப்பான்?’ – எல்லாருடைய மனதிலும் இந்தக் கேள்விதான் ஓடிக் கொண்டிருந்தது. காரணம், கூப்பர் பயணித்த விமானத்தைப் பின்தொடர்ந்த மூன்று விமானங்களும் கண்கொத்தி பாம்பாய் கண்காணித்து வந்தன. கண்டிப்பாய் கூப்பர் குதிக்கும்போது அவர்கள் கண்ணில் பட்டிருக்க வேண்டும்.

பணத்தை உடலில் கட்டிக்கொண்டு குதித்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தது எஃப்.பி.ஐ. (டான் கூப்பர் என குற்றவாளியின் பெயரை போலீஸார் வெளியிட்டபோது ஒரு பத்திரிக்கை தவறுதலாக டி.பி.கூப்பர் என அச்சிட்டது. பின் அதுவே அவன் பெயரானது)

பயணிகளின் உதவியோடு அவனின் உத்தேச படம் வரையப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டது. 8.13 மணிக்குதான் அவன் குதித்திருக்க வேண்டும் என அந்த நேரத்தில் விமானம் இருந்த இடத்தில் தேடத் தொடங்கினார்கள். சாதாரணமாக இல்லை. ஏறக்குறைய ஆயிரம் ஊழியர்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என மிகப் பிரம்மாண்டமாக. எந்த இயக்கத்திலும் சாராத ஒருவனை ஒரு அரசாங்கமே தேடிய வகையில், அமெரிக்க சரித்திரத்தில் மிகப்பெரிய ‘மேன் ஹன்ட்’ இது. நூற்றுக்கணக்கான மைல்கள் ஒரு சின்ன ‘க்ளூ’வுக்காக நடந்தார்கள். ஆனால் எந்த இடம் என்பதில் விமானிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு, எல்லையை மேலும் பெரிதாக்கியது.

அடுத்த ஆண்டில் எஃப்.பி.ஐ, பணயத் தொகையின் சீரியல் நம்பர்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டது. காரணம், அதுநாள்வரை அவர்களுக்கு கிடைத்திருந்ததெல்லாம் விமானத்தில் இருந்த சில கைரேகைகளும், கூப்பரின் டை க்ளிப்பும்தான். அந்த சீரியல் நம்பர் கொண்ட நோட்டு உங்களிடம் வந்தால் உடனே முறையிடவேண்டும் என காவல்துறையும் பத்திரிகைகளும் கூறின. பரிசுத் தொகைகளும் அறிவிக்கப்பட்டன. ப்ச்! பிரயோஜனம் இல்லை.

us2

9 ஆண்டுகள் கழித்து, பிரையன் இங்ரம் என்ற எட்டு வயது சிறுவன் கொலம்பியா ஆற்றின் கரையில் விளையாட்டாய் பள்ளம் தோண்டியபோது, சில சிதைந்த டாலர் நோட்டுகளை கண்டெடுத்தான். தகவல் கிடைத்ததும் சிலிர்த்து எழுந்தது எஃப்.பி.ஐ. ஆராய்ந்ததில் அவை கூப்பருக்குக் கொடுக்கப்பட்ட பணயத்தொகையின் சிறியப் பகுதி என தெரிய வந்தது. அந்த இடத்தைச் சுற்றி முன்னிலும் வேகமாக தேடுதல் வேட்டைகள் நடந்தன. ம்ஹூம்! அந்த நோட்டுகளே அந்த வழக்கில் கிடைத்த முதலும் கடைசியுமான முக்கியத் தடயங்கள்.

20-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய குற்றங்களுள் ஒன்றான இதன் முடிச்சு 21-ம் நூற்றாண்டு வரை நீண்டது. 2009-ல் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு மீண்டும் ஒரு தடவை தேடுதல் வேட்டை நடந்தது. அதே ரிசல்ட்தான். இப்போது கூப்பரின் கதையை சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் ‘இந்த வழக்கில் முன்னேற்றம் எதுவுமில்லை. எனவே 45 ஆண்டுகால விசாரணையை முடிவிற்கு கொண்டு வருகிறோம்’ என கைகளைத் தூக்கி சரணடைந்திருக்கிறது எஃப்.பி.ஐ. தொலைதூர தேசங்களில் எல்லாம் மூக்கை நுழைத்து வேட்டையாடிய கழுகு, தன் பாதத்தின் கீழ் நடந்த வேட்டையில் மண்ணைக் கவ்வியிருக்கிறது.

கூப்பர்… ஹீரோவா… வில்லனா?

இந்தக் கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. காரணம், கூப்பரின் சாகசத்தால் ஈர்க்கப்பட்டு அதே முறையில் ஏராளமான கடத்தல் முயற்சிகள் நிகழ்ந்தன. ஆனால் அவை அத்தனையும் தோல்வியில்தான் முடிந்தன. இது அவன் புகழை இன்னும் அதிகம் பரப்பியது. ‘நான்தான் கூப்பர், இவன்தான் கூப்பர்’ என ஏராளமானோர் போலீஸாரிடம் சரணடைந்தார்கள். ஆனால் தங்கள் கூற்றைக் கடைசி வரை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

‘அவ்வளவு உயரத்திலிருந்து கீழே குதித்த கூப்பர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை’ என்கிறது எஃப்.பி.ஐ. ஆனால் சடலம் எதுவும் இதுநாள் வரை தட்டுப்படவில்லை. ஒன்றை மட்டும் ஒப்புக்கொள்கிறது எஃப்.பி.ஐ. ‘இந்த அபாயகரமான சாகசத்தை மேற்கொள்ள ஒன்று அவன் முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது அசாத்திய தைரியம் படைத்தவனாக இருக்கவேண்டும்’ என்பதே அது. கூப்பரின் ரசிகர்கள் இரண்டாவது கூற்றை வழிமொழிகிறார்கள். ‘விமானியிடம் உயரம், வேகம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு சொன்ன கூப்பர் உறுதியாக பாராசூட்டில் இருந்து பாதுகாப்பாய் குதித்து தப்பிக்கவும் திட்டங்களை வைத்திருந்திருப்பான். எண்பத்தி சொச்ச வயதில் கண்டிப்பாய் அவன் எங்கேயோ இருந்து இதெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான்’ என்கிறார்கள் அந்த ரசிகர்கள்.

உண்மை கூப்பருக்கே வெளிச்சம்!

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News