நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட், பாங்க் ஆப் இந்தியா வங்கி மற்றும் சசிகலா ஆதரவாளரான சஜீவன் வீடு மற்றும் மர மில்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மொத்தம் 187 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நீலகிரி மாவட்டத்தில் கோடநாடு எஸ்டேட்டும் அடங்கும்.
நீலகிரி மாவட்டத்தில் கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டோருக்கு சொந்தமானவை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அறங்கேறின. இந்தப் பிரச்சினை ஓரளவு ஓய்ந்த நிலையில்,
காலை சுமார் 6.45 மணிக்கு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், மூன்று வாகனங்களில் எஸ்டேட்டின், ஏழாவது நுழைவுவாயில் வழியாகவும், பங்களாவின் பின்புற வாசல் வழியாகவும் உள்ளே சென்றனர்.
அங்குள்ள சி.சி.டி.வி., கேமிராவின் திசைகளை மாற்றியமைத்து, அதன் பின் எஸ்டேட் பங்களா மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
உள்ளே நுழைந்ததும் ஊழியர்களின் மொபைல் போன்களை தங்கள் வசப்படுத்தினர். மேலும், தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர்.
ஊழியர்கள் மற்றும் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சோதனையில் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மூன்று மணி நேரம் கோடநாடு எஸ்டேட்டில் சோதனையை முடித்த அதிகாரிகள், எஸ்டேட் மேலாளர் நடராஜனை அழைத்துக் கொண்டு புதிதாக வாங்கப்பட்ட கர்சன் பகுதியில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
காலை 11.00 மணியளவில் இனோவா டி.எண்.66 எல் 0122, ஷிப்ட் டிஸைர் டி.எண்.37 2728 ஆகிய இரண்டு வாகனங்களில் வெளியே வந்த அதிகாரிகள் ஈளாடா பகுதியில் உள்ள, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் எஸ்டேட் கணக்குகளை ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் வந்த டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்த அதிகாரிகள், கிரீன் டீ எஸ்டேட்டில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
வருமானத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையை அடுத்து, இவ்விரு எஸ்டேட்களின் நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோடநாடு காட்சி முனைக்கு சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்பே போலீசார் அனுப்பி வைத்தனர்.
சசிகலா ஆதரவாளர் வீட்டிலும் ரெய்டு:
இதே நேரத்தில், நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சசிகலாவின் ஆதரவாளரான சஜீவன் என்பவருக்கு சொந்தமான மரமில், அலுவலகம் காப்பி தோட்டம் வீடு ஆகியவற்றில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரிதுரையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மர வியாபாரியான சஜீவன் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன் கூடலூரில் மரவியாபரத்திற்காக வந்த இவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவின் மரவேலைப்பாடுகளுக்கான பணிகளுக்கு சென்ற பின், சசிகலாவின் நெருங்கிய ஆதரவாளராக மாறினார். இதை பயன்படுத்தி அனைத்து அரசியல்வாதிகளோடு தொடர்பு எற்படுத்தி பின்னர் கூடலூர் பகுதியில் அதிமுகவின் முக்கிய விஐபியாக வலம் வந்தார். கடந்த பொது தேர்தலில் கட்சி நிர்வாகிகளுக்கு பணபட்டுவாடா செய்யும் பணியில் முக்கிய பங்கு வகித்தார்.
மிக குறுகிய காலத்தில் மிக பெரியளவில் இவரிடம் சொத்துக்கள் சோ்ந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் கூடலூரை அடுத்த அல்லூர் வயல் பகுதியில் 20 ஏக்கர் காப்பித்தோட்டம் வாங்கியுள்ளர். இந்த நிலையில் நேற்று கூடலூர் பகுதியிலுள்ள இவரது சொத்துகள் குறித்து வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது கூடலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
