தமிழ் மக்கள் பேரவையால் களமிறக்கப்படும் புதிய அரசியல் முன்னணிக்கான வேட்பாளர் தெரிவு, ஆசனப் பங்கீடு என்பவற்றை முன்னெடுப்பதற்காகத் தமிழ் மக்கள் பேரவையால் வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டுள் ளது. இந்தக் குழுவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்னணியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயங்களைக் கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் அணியை உருவாக்கிக் களமிறக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டது.
பேரவையின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த சகல தரப்புக்களும் இந்த விடயத்திற்கு இணங்கின. தமிழ் மக்கள் பேரவையில் தற்போது இடம்பெற்றுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மேலும் சில அரசியல் தரப்புக்களும், ஒரு சில பொது அமைப்புக்களும் இணைந்து புதிய அரசியல் முன்னணியில் போட்டியிடவுள்ளன.
தேர்தல்கால கூட்டாகவே தற்போது இதனைப் பதிவுசெய்து, பொதுச் சின்னத்தில் இவை போட்டியிடவுள்ளன. அரசியல் கட்சிகள் தமக்குரிய வேட்பாளர்களைத் தெரிவு செய்யும். தமிழ் மக்கள் பேரவை தானது அங்கத்துவப் பொது அமைப்புக்களிலிருந்து போட்டியிடவுள்ளவர்களைத் தெரிவு செய்யும்.
இறுதி வேட்பாளர் தெரிவு மற்றும் ஆசனப் பங்கீடு என்பன தமிழ் மக்கள் பேரவையின் வழிநடத்தல் குழுவினால் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
