விலை உயர்ந்த ஹைஏஸ் வாகனத்தில் மாடுகள் கடத்திய மூவரைச் சிறப்பு அதிரடிப்படையினர் நேற்றுக் கைது செய்தனர். தீவகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதி உயர் வாகனங்களில் கால்நடைகள் கடத்தப்படுகின்றன என்று சிறப்பு அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தின் இருக்கைககளை அகற்றி, கண்ணாடி மறைப்புடன் ஹைஏஸ் வாகனம் ஒன்று பயணித்தது. அதனைச் சிறப்பு அதிரடிப்படையினர் அவதானித்தனர்.
அந்த வாகனத்தின் முன்னால் மோட்டார் சைக்கிளில் தகவல் வழங்கும் வகையிலும் ஒருவர் பயணித்துள்ளார். சந்தேகம் கொண்ட அதிரடிப்படையினர் வாகனத்தை இடைமறித்தனர். அந்த வாகனத்தில் ஆறு மாடுகள் இருந்தன.
வாகனத்தில் பயணித்த இருவரையும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும், தடயப்பொருள்களாக 6 மாடுகள் மற்றும் ஹைஏஸ் வாகனத்தையும் அதிரடிப்படையினர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
