இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து மாநகர கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூர் போன்ற நகரங்களில் இந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் ெபஞ்சில் கடந்த 2 நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடரிடம் சட்டத்தை கொண்டுவந்தால் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டத்தை ஏன் நடைமுறைப் படுத்தவில்லை.இந்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினர். வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், டிஜிபி ராஜேந்திரன் நேற்று அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் கடுமையான முறையில் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை அமல்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக இன்று முதல் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.அந்த பத்திரிகை செய்திகளை உடனடியாக தலைமையகத்திற்கு அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்களும், எஸ்பிக்களும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சென்னை தவிர மற்ற நகரங்களில் இன்றிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.
.
