இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் பற்றியும் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவு பற்றியும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, பிரித்தானியா எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இம்மாதம் 21 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், இதன்போது அதுபற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் பிரிவின் முதனிலை செயலாளர் டொம் சொப்பர் (Tom Soper), அரசியல் ஆலோசகர் இன்ஷாப் மாகர் (Insaf Markar) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவம் செய்து சட்டத்தரணி மது கல்பனா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


