சினிமாவில் நுழைந்து மிக விரைவில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்தவர் பிரபல பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். இயக்குநர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தோடு வந்த இவர் ‘வேட்டை மன்னன்’ படத்துக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். இவர் ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அருண்ராஜா காமராஜ் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி, பாடி பிரபலமானவர். இதனையடுத்து இவர் எழுதி விஜய்யின் ‘பைரவா’ படத்தில் இடம்பெற்ற ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’வும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
அடுத்தடுத்து பல படங்களில் பாடல்களை எழுதி வரும் இவர், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு பாடலையும் எழுதி பாடினார். தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறாராம்.
சமீபத்தில் மகளிர் உலகப்கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கௌரவப்படுத்தும் வகையில் படம் எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக கிரிக்கெட் விளையாடத் தெரிந்த பெண்களுக்கான ஆடிஷனை தற்போது நடத்தி வருகிறார்களாம். அருண்ராஜா காமராஜின் இந்த முயற்சிக்கு திரைத்துறையினர் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
