நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் 13 இலட்சத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடிக்குமாயின் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நிலவும் கடும் வரட்சியினால் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 இலட்சத்து 23 பேர் தற்போது வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1 இலட்சத்து 28 ஆயிரத்து 652 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 308 பேரும், மன்னார் மாவட்டத்தில் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 928 பேரும், வவுனியா மாவட்டத்தில் 1இலட்சத்து ஆயிரத்து 914 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 1இலட்சத்து 64 ஆயிரத்து 463 பேரும் மாவட்ட ரீதியில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. திறைசேரியினூடாக குறித்த 1.5 பில்லியன் ரூபா நிதியினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடிக்குமாயின் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிவாரண நிதியினை இரட்டிப்பாக ஒதுக்கீடு செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கெப்பத்திகொல்லாவ பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது விடுத்த பணிப்புரைக்கமையவே குறித்த உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை புத்தளம், குருநாகல், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலனறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்காக குறித்த நிதியிலிருந்து 1.43 பில்லியன் ரூபாய் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு, திருகோண மலை, அம்பாறை, பதுளை, ஹம்பாந் தோட்டை, வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப் பதாகவும் குறித்த மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

