ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான, யு. எஸ். ஓபன் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற, மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டி ஒன்றில், 6ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர்-உலகின் 45ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினர்.
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய ஏஞ்சலிக் கெர்பர், 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
19 வயதேயாகும் டீன் ஏஜரான நவோமி ஒசாகாவுக்கு, வெற்றி பெற வெறும் 65 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இன்று அதிகாலை நடந்த, ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்-உலகின் 85ம் நிலை வீரரான செர்பியாவின் டஸ்ஸன் லாஜோவிக் ேமாதினர். இதில், 7-6 (8-6), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒட்டுமொத்தமாக 15 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரபேல் நடாலுக்கு தொடக்கத்தில் டஸ்ஸன் லாஜோவிக் கடும் சவால் அளித்தார். இதனால் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் வரை போட்டி நீடித்தது.
இது குறித்து ரபேல் நடால் கூறுகையில், ‘’தொடக்கத்தில் போட்டி கடுமையாக இருந்தது. டஸ்ஸன் லாஜோவிக் நன்றாக விளையாடினார்.
அதிக தவறுகளை அவர் செய்யவில்லை’’ என்றார். மழை காரணமாக பெரும்பாலான போட்டிகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
