ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை, அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்தச் செய்தியை பி.சி.சி.ஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி உறுதி செய்தார். இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகே இந்தத் தொடர் நடக்க வய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழுநேர உறுப்பினர்களாக, ஜூன் மாதம் இணைந்தனர். இதனால், டெஸ்ட் அந்தஸ்து இந்த இரு நாடுகளுக்கும் கிடைத்தது. 2018 மே மாதம், பாகிஸ்தான் அணியோடு தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடப் போவதாக அயர்லாந்து ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணியுடன் விளையாடுவதாக இருந்தது. ஆனால், மார்ச் மாதம் நடக்கவுள்ள உலககக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டி இருப்பதால், அந்தத் தொடரிலிருந்து ஜிம்பாப்வே அணி விலகியது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியக் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து, இரு அணிகளும் அடுத்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து ஆலோசிக்க முடிவு செய்தனர். இன்று டெல்லியில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான தேதி மற்றும் மைதானம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. “இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக இருக்கும். எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பி.சி.சி.ஐ-கு நன்றி” என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஃபியுல்லா ஸ்டனிக்சாய் தெரிவித்தார்.
