கேலிச்சித்திர கதாநாயகனான ‘தி இன்கிரெடிபல் ஹல்க்’ போல் கோபம் வரும்போது தாம் அதிக வலிமை பெறுவதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறிக்கொண்ட போதிலும், எதிர்ப்பாளர்களின் கோபமே முன்னிலையில் இருக்கிறது.
உடன்பாட்டுடனோ அல்லது உடன்பாடின்றியோ அக்டோபர் 31ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்றும் அவரது திட்டத்தைக் கண்டித்து லக்சம்பர்க் நகரில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலுடன் போரிஸ் ஜான்சன் நடத்தவிருந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பிலிருந்து ஜான்சன் பங்கேற்கவில்லை.
காலி அரங்கில் பேசிய திரு சேவியர், கடந்த 2016ல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த இயக்கத்தின்போது பிரிட்டிஷ் மக்களை ஏமாற்றி விட்டு, தற்போது அரசியல் லாபத்துக்காக பிரிட்டனின் எதிர்காலத்தை பணையம் வைத்திருப்பதாக கூறினார்.
பிரெக்சிட்டின் தோல்விக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களே காரணம் எனக் காட்டும் வகையில் போரிஸ் ஜான்சன் பேசி வருவது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் குடிமக்கள், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் அனைவரது எதிர்காலமும் தற்போது போரிஸ் ஜான்சன் கைகளில்தான் உள்ளது. அவர்களின் எதிர்காலம் ஜான்சனின் பொறுப்பு என்றார் திரு பெட்டல்.
“எங்களுக்கு எழுத்துபூர்வமான உடன்படிக்கை தேவை. காலம் கடந்துகொண்டிருக்கிறது. பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள்,” என்றார் அவர்.
லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே லக்சம்பர்க் செய்தியாளர் கூட்டத்திலிருந்து விலக தாம் முடிவு செய்ததாக ஜான்சன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“சலசலப்பு அதிகமாக இருக்கும். நமது கருத்துகள் எடுபட்டிருக்காது,” என்றார் அவர்.
கூட்டத்தை உள்ளரங்கில் நடத்த தாங்கள் முடிவெடுத்ததாகவும் ஆனால் அனைத்து செய்தியாளர்களுக்கும் இடமளிக்கும் அளவுக்கு தங்களிடம் இடவசதி இல்லை என்று லக்சம்பர்க் தரப்பினர் கூறியதாகவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறினர்.
ஆனால், தம்மை அவர்கள் முறையாக நடத்தவில்லை என்றும் ஜான்சன் குறைகூறினார்.
எனினும், இதுவரையில் உறுதியான திட்டம் எதையும் ஜான்சன் முன்வைக்கவில்லை என்று பல தரப்பிலிருந்தும் அவர் மீது குறைகூறப்படுகிறது.

