கைதுகளின் மூலமாக இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கைதுகளை விடுத்து இந்த மீனவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்தார். நவம்பர் முதல் நவீன கண்காணிப்பு கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படை தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகளை தடுக்க எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினை அல்ல. இது மிக நீண்டகால பிரச்சினையாகும். சுமார் 100 ஆண்டுகளாக இந்த கடல் பிரச்சினை உள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய மீன்பிடி நகர்வுகள் என்பது விரைவில் தீர்வு பெறக்கூடிய ஒன்றல்ல. இப்போது புதிய மீன்பிடி சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இவற்றின் மூலமாக தீர்வு ஒன்றை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என நாம் நம்பவில்லை. இதுவரையில் கடற்படை மூலமாக கைதுகள் இடம்பெற்றன, எல்லை தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் என்னைப் பொறுத்தவரையில் கைதுகளை நிறுத்த வேண்டும். மாறாக இந்திய மீனவர்களுக்கு உதவியாக நாம் இருக்க வேண்டும். ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக இதனை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்கான கடல் எல்லையை அடையாளம் காட்ட வேண்டியது எமது கடமையாகும். கடல் எல்லை அறியாத காரணத்தினால்தான் அவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது. எனவே இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் உதவியுடன் அவர்களுக்கான கடல் எல்லையை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கை மீனவர்களுக்கும் இதனையே நாம் செயற்படுத்த வேண்டும். மாறாக கைது செய்வதால் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
நவம்பர் மாதம் தொடக்கம் புதிய கண்காணிப்பு செயற்பாடுகளை ஆரம்பிக்க வுள்ளோம். கடற்படை படகுகளில் இந்த நவீன தொழில்நுட்ப திட்டங்களை கையாளவுள்ளோம்.இந்நிலையில் இந்த முரண்பாடுகளை எம்மால் சரியாக கையாள முடியும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
