இந்தோனேசியாவில் புகைப்படக்காரர் ஸ்லேட்டரின் கேமராவில் குரங்கு தன்னைத் தானே எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பான காப்புரிமைப் பிரச்சினை நீதிமன்றத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் புகைப்படத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தில் 25% தொகையை இந்தோனேசியக் குரங்குகளுக்குச் செலவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கு ஒன்றின் செல்ஃபி புகைப்படம் உலக அளவில் மிகப் பிரபலமானது. டேவிட் ஸ்லேட்டர் எடுத்த அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படம் சுமார் 5 கோடிக்கு அதிகமானோரால் பகிரப்பட்டது.
சிக்கலான குரங்கின் செல்ஃபி புகைப்படம்
டேவிட்டின் அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படங்களை விக்கிமீடியா தனது பொதுத் தளத்தில் வெளியிட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் தனக்குச் சொந்தமான புகைப்படத்தை பொதுவெளியில் விக்கிமீடியா வெளியிட்டது தவறு என்றும், அதனால் அப்படத்தை நீக்க வேண்டும் என்றும் டேவிட் வலியுறுத்தினார்.
ஆனால் விக்கிபீடியாவோ இந்தப் புகைப்படம் குரங்கு எடுத்தது. அதனால் டேவிட்டுக்கு அதன் காப்புரிமை சாராது. எங்கள் தளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை என்றது.
மேலும் இந்தப் பிரச்சினைக்கு காப்புரிமை பொருந்தாது. காரணம், ஒரு புகைப்படம் எடுப்பவர் அதற்கான ஒளி, தேவைப்படும் கோணம் போன்றவற்றை எல்லாம் யோசிப்பார். இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு புகைப்படத்துக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியும். வெறுமனே குரங்கிடம் கேமராவைத் தந்து விட்டு அது எடுத்துக்கொண்ட படங்களுக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியாது. காப்புரிமை என்பது ஒருவரின் உழைப்புக்குத் தரப்படும் வெகுமதி அல்ல. அவரை மேலும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டுதல்தான். இதை டேவிட் புரிந்துகொள்ள வேண்டும் என்று காப்புரிமை வல்லுநர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
அந்தப் புகைப்படத்துக்கான காப்புரிமை பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. இதன் காரணமாக டேவிட் பெருட் இழப்புகளை சந்தித்தார். காப்புரிமை தொடர்பான இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் நடந்து வருவதால் இங்கிலாந்தில் வசிக்கும் டேவிட் விமான போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால் வழக்கு விசாரணையில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் காப்புரிமைப் பிரச்சினை தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம், செல்ஃபி புகைப்படம் எடுக்கப்பட்ட கேமராவுக்குச் சொந்தக்காரரான டேவிட் ஸ்லேட்டர், புகைப்படம் மூலம் வரும் வருமானத்தில் 25% பணத்தை இந்தோனேசியாவில் உள்ள கொண்டை வால் குரங்குகளைக் காப்பாற்ற அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
எனினும் இதுகுறித்துப் பேசிய ஸ்லேட்டரின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ, செல்ஃபி புகைப்படம் இதுவரை எவ்வளவு வருமானத்தை ஈட்டியுள்ளது என்றோ மீதமுள்ள 75% வருமானத்தை ஸ்லேட்டரே வைத்துக் கொள்வாரா என்பது குறித்த கேள்விகளுக்கோ பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அத்துடன் ஸ்லேட்டரின் வைல்ட்லைஃப் பர்சனாலிட்டீஸ் லிமிடட் என்னும் நிறுவனத்துக்கே, குரங்கு எடுத்த செல்ஃபி புகைப்படம் உட்பட ஸ்லேட்டரின் அனைத்து புகைப்படங்களுக்கான வணிக உரிமைகளும் சொந்தம் என்று கூறியுள்ளார் வழக்கறிஞர் ஆண்ட்ரூ.

