செப்டம்பர் மாதம் குர்கானில் உள்ள ரயான் பள்ளியில் ஏழு வயது மாணவன் பிரத்யுமேன் தாகூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ, பதினோராம் வகுப்பு மாணவனை புதன்கிழமை கைது செய்துள்ளது.
ஒரு நீண்ட விசாரணைக்கு பிறகு இந்த மாணவனை கைது செய்ததாக சி.பி.ஐ பிபிசி-யிடம் தெரிவித்தது.
பல ஆதாரங்களின் அடிப்படையிலேயே அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் கூறினார். இந்த ஆதாரங்களின் பட்டியலில், அந்த மாணவனுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு விவரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பலர் அளித்த வாக்குமூலங்கள் ஆகியவை அடங்கும் என்றனர்.
இத்தனை நாட்களாக, ஹரியானா போலீஸார் இந்த கொலையை செய்தது அந்த பள்ளி பேருந்தின் நடத்துனர் என்று கூறி வந்தனர்.
கொலை செய்யப்பட்ட பிரத்யுமேன் தாகூரின் உடல், பள்ளி வளாகத்திலிருந்து செப்டம்பர் 8-ம் தேதி எடுக்கப்பட்டது.
“என் மகன் அப்பாவி”
கைது செய்யப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவனின் தந்தை, “என் மகன் அப்பாவி. அவனுக்கும் இந்த கொலைக்கு சம்பந்தம் இல்லை” என்று கூறினார்.
தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த அவர், “நாங்கள் முதல் நாளிலிருந்தே இந்த வழக்கு தொடர்பாக போலீஸுக்கு உதவி வருகிறோம். இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு சென்ற பின், நாங்கள் அவர்களுக்கும் உதவி இருக்கிறோம். ஹரியானா காவல் துறை இந்த வழக்கை விசாரித்தபோது, எனது மகனையும் விசாரித்தது”என்றார்.
மேலும் அவர், “இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாறிய போது, எங்களை டெல்லியில் உள்ள அவர்களது தலைமையகத்துக்கு நான்கு முறை அழைத்து விசாரித்து இருக்கிறார்கள். செவ்வாய்கிழமையும் எங்களை அழைத்து இருந்தனர். நாங்கள் காலை 11 மணிக்கு சென்றோம். ஆனால், ஒரு நீண்ட காத்திருப்புக்குப் பின் இரவு 12 மணிக்கு எங்களை அழைத்து பேசினர். அப்போது, உங்கள் மகன்தான் குற்றவாளி. அவந்தான் இந்த கொலையை செய்திருக்கிறான் என்று சொல்லி, அவனை கைது செய்தனர். `உனது மகனின் ஒப்புதல் வாக்குமூலத்தில் நீ கையெழுத்திடாவிட்டால், நீ இங்கிருந்து செல்லமுடியாது` என்று என்னையும் மிரட்டினார்கள். நான் பின்னிரவு 2 மணிக்கு அங்கிருந்து வெளியேறினேன். கொலை நடந்த நாளில் என் மகன் பள்ளியில்தான் இருந்தான். அவன் சட்டையில் எந்த கறையும் இல்லை. பள்ளியே வெளியே அனுப்பிய பின்தான் அவன் அங்கிருந்து வந்தான்” என்று கூறினார்.
பிரேதத்தை முதலில் பார்த்த மாணவன்
இப்போது சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு இருக்கும் மாணவன்தான், கொலையான மாணவனின் பிரேதத்தை முதலில் பார்த்த மாணவன் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டப்பின், அந்த பதினோராம் வகுப்பு மாணவனை பலமுறை சி.பி.ஐ விசாரித்து இருக்கிறது.
என் சந்தேகம் நிஜமாகி இருக்கிறது
சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த கொலையான மாணவனின் தந்தை பருண் தாகூர், “என் சந்தேகம் நிஜமாகி இருக்கிறது” என்றார்.
பிரத்யுமேன் தாகூரின் மிதிவண்டி – BBC
பிபிசி-யிடம் பேசிய பருண் தாகூர், “சி.பி.ஐ மீது நம்பிக்கை வைத்து அவர்களது விசாரணையை கோரினோம். எங்களது நம்பிக்கை வீண்போகவில்லை. மக்கள், ஹரியானா போலீஸ் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். அவர்களது விசாரணையில் ஏதோ போதாமை இருப்பதாக கருதினர். அவர்கள் நினைத்ததுதான் சரி என்று இப்போது ஆகி இருக்கிறது.”என்றார்.
மேலும் அவர், “கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் குறித்து எங்களுக்கு எந்த விஷயமும் தெரியாது. நாங்கள் இந்த கொலையை கொண்டாடவில்லை. என் மகனின் நண்பர்கள் அனைவரும் மென்மையானவர்கள்” என்றார்.
நடந்துனரை கைது செய்த காவல் துறை
இந்த கொலை தொடர்பாக ஹரியானா காவல்துறை முன்பே அந்த பள்ளி பேருந்தின் நடத்துனர் அசோக்குமாரை கைது செய்திருந்தது.
அந்த நடத்துனர், தாம்தான் இந்த கொலையை செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்து இருந்தது.
இந்த கொலை வழக்கில் நியாயமான விசாரணை கோரி மக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கியதும், ஹரியானா அரசாங்கம் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு செப்டம்பர் 22-ம் தேதி மாற்றியது.
