எட்கா ஒப்பந்தம் குறித்த இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை ஒக்டோபர் மாதம் புதுடில்லியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எட்கா ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சேவை மற்றும் பொருட்கள் பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இதன்படி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் இரண்டாம் கட்டப்பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்படவுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் எட்கா ஒப்பந்த ஆலோசனைக் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது,
எட்கா ஒப்பந்தம் தொடர்பில் முழுமையான இருதரப்பு இணக்கப்பாடுகள் இதுவரையிலும் எட்டப்படவில்லை. ஆயினும் முதலாவது சுற்றுப்பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை விட அதிகமான பரப்புகளில் இரண்டாம் தர பேச்சுவார்த்தை நடைபெறும். குறிப்பாக தகவல் பரவலாக்கம் மற்றும் சேவை அமுலாக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இலங்கை, இந்தியாவின் நிலைப்பாடுகள் பல்வேறு மட்டங்களில் வெளிப்பட்டுள்ளன. அந்த தகவல் பரிமாற்றங்களும் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் வகிக்கவுள்ளன. சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, வர்த்தகம் ஆகிய துறைகள் சம்பந்தமாக இதன்போது ஆராயப்படவுள்ளன.
ஏற்கனவே தொழில்நுட்ப, தகவல் பரிமாற்றல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சமரசம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்வதற்கு இப் பேச்சுவார்த்தைகள் பெரிதும் தாக்கம் செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்கா ஒப்பந்தத்தின்மூலம் உருவாக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் இருநாடுகளின் இறையாண்மை மீது நேரடியான தாக்கம் செலுத்தும் என முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்ட நிலை
யில் பல எதிர்ப்பு போராட்டங்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
