அரசியல் அமைப்பில் 52ன் கீழ் 02 சரத்தில் அமைச்சர்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை அறியாமலா 4 வருடம் மாகாண சபையினை நடாத்திநீர்கள் என வடக்கு மாகாண சபையின் எதிர்க் கண்சித் தலைவர் சி.தவராசா சபையில் கேள்வி எழுப்பினார்.
வடமாகாணசபையின் 109வது அமர்வு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது .இதில் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார நியதிச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெற்றது இதன்போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
குறித்த நியதிச் சட்ட குழுநிலை விவாத்த்தில் நியதிச் சட்டம் ஆராயப்பட்டது. அதன்போது உருவாக்கப்படும் நியதிச் சட்டத்தில் குறித்த அமைச்சின் செயலாளர் அமைச்சரின் பணிப்பின் கீழ் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என ஆரம்பிக்கும் விடயம் தொடர்பில் விவாதிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதாவது அரசியல் யாப்பின் 52ம் சரத்தின் பிரகாரம் ஓர் அமைச்சருக்கு வழங்கப்பட்ட உரிமையை மீண்டும் நியதிச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய தேவை கிடையாது.
அதாவது குறித்த சட்டம் சொல்கின்றது. அமைச்சின் செயலாளர் அமைச்சரின் பணிப்பிற்கும் , கட்டுப்பாட்டிற்கும் அமைய திணைக்கள மேற்பார்வை செய்ய வேண்டும்.
என தெளிவாக 2ம் சரத்தில் உள்ளது. எனத் தெரிவித்தபோது வடக்கு மாகாண சபையின் முன்னாள் , இன்னாள் அமைச்சர்கள் குறித்த விடயத்தினை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள் எனக் கோர எதிர்க்கட்சித் தலைவர் வாசித்தார்.
இதன்போது குறுக்கிட்ட முதலமைச்சர் குறித்த விடயம் எங்கிருந்து வாசிக்கின்றீர்கள் என வினா எழுப்பியபோது. குறித்த விடயம் இலங்கையின் அரசியல் யாப்பின் 52 / 2ல் உள்ளது. எனப்பதிலளித்தார்.
இதேநேரம் குறித்த அமைச்சிற்குரிய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமானது தற்போதும் வடக்கில் இயங்கினாலும் அது மத்தியின் சட்டவாக்கத்திற்கு அமையவே இயங்குவதனால் மத்தி நினைத்த நேரம் தலையீடு செய்யும். மாகாண சபை இவ்வாறான நியதிச் சட்டத்தை உருவாக்கி ஆளுநரின் ஒப்புதலை பெறும் தினத்தில் இருந்து மட்டுமே முழுமையாக மாகாண அதிகாரத்திற்கு உட்பட்டது.
இதனாலேயே அனைத்து நியதிச் சட்டங்களையும் உருவாக்குமாறு கோருகின்றேன்.அவ்வாறு உருவாக்காது மத்தி குறுக்கீடு செய்கின்றது எனக்கூற முடியாது.்ஏனெனில் அது அவர்களிற்கான சட்டப்படியான உரிமை. என்றார்.

