அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என முகா தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் இப்போது இரண்டரை வருடங்களை கடந்து வாக்குறுதி மீறப்பட்ட நிலையில் வீறு நடை போடுகின்றது.
குறித்த தேசியப்பட்டியல் முன்னாள் கிழக்கு முதலமைச்சருக்கு வழங்கப்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்ட போதிலும், பிரதமரின் அழுத்தம் காரணமாக – கிழக்கு முதல்வருக்கு வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஹக்கீம் தள்ளப்பட்டுள்ளார் என்பதே தற்போதைய செய்தி. இதற்கு பிரதியுபகாரமாக பிரதமர் மற்றும் முதல்வர் தரப்புக்கள் ஊடாக சில, ஆனால் பெறுமதிமிக்க அனுகூலங்கள் ஹக்கீமுக்கு கிடைக்கவுள்ளன.
அமைச்சரவைக்கு ஹக்கீமால் சமர்ப்பிக்கப்பட்டு , நிராகரிக்கப்பட்ட – இந்திய தூதரகமும் அந்த நாட்டின் மிகப்பெரிய பண புரோக்கரும் தொடர்புபட்ட கண்டி பகுதியொன்றின் குடிநீர் திட்ட அனுமதி மீளவும் பிரதமர் தரப்பால் வழங்கப்படவுள்ள அனுகூலம் என தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையில் அட்டாளைச்சேனை மக்களை- அவர்களின் தேசியப்பட்டியல் விவகாரத்தில் இருந்து அந்த மக்களை திசை திருப்ப ஹக்கீம் தரப்பு முகா திட்டம் வகுத்துள்ளதாம்.
அதுதான், சம்பந்தமே இல்லாமல் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியலை வம்புக்கு இழுத்து, இட்டுக்கட்டி, பொய்களை புனைந்து – அட்டாளைச்சேனை மக்களையும் சமூகத்தையும் திசை திருப்புவதாகும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையை கைப்பற்ற வேண்டிய தேவை ஹக்கீமுக்கு உள்ளது. தேசியப்பட்டியல் வழங்காமல் என்ன முகத்தோடு அந்த மக்களிடம் சென்று வாக்கு கோருவது என்ற தர்மசங்கட நிலைக்குள் ஹக்கீம் அகப்பட்டுள்ளார். அதில் இருந்து ஓரளவு தப்பிக்கும் முகமாகவே மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் விவகாரத்தில் அமைச்சர் ரிஷாதுக்கு சேறு பூச பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆனால், அட்டாளைச்சேனை மக்கள்- சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமை மூலமான உரிய இலக்கை அடையும் அல்லது மண்டியிட வைக்கும் அணுகுமுறையை கடைப்பிடிப்பதன் மூலமே தமக்குரிய தேசியப்பட்டியலை அடையலாம் என்பதில் அட்டாளைச்சேனை மக்கள் எடுத்துள்ள முடிவை ஹக்கீம் வேட்புமனு நேரத்தின் போது உணர்ந்துகொள்ள உள்ளார் என்கின்றனர் அங்குள்ள இளைஞ்சர் சமூகத்தினர்.
ஆக, மக்கள் காங்கிரசில் இதுவரை ஏற்படாத தேசியப்பட்டியல் பிரச்சினையை – பிரச்சினை என காட்ட முனைவதை இட்டு கட்சிப் போராளிகளும்- ஏன், முகாவில் உள்ள படித்த போராளிகளும் ஏளனமாக சிரிப்பதை இங்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
சம்மாந்துறை வீசி இஸ்மாயில் மற்றும் சாய்ந்தமருது ஜெமீல் ஆகியோருக்கிடையில் இந்த விவகாரத்தில் முடிச்சு போடுவதை இட்டு அவர்களே மாறி மாறி சிரித்துக்கொள்வதை – ஹக்கீமின் மூட்டிவிடும் நோக்கை அவதானித்து அதில் அவர்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
வவுனியாவில் சின்னசிப்பிக்குளம், அட்டாளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய மூன்று ஊர்களுக்கும் செல்வதற்கு ஹக்கீமுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் ஒருபுறம் இருக்க, இந்த மூன்று ஊர்களுக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் அந்தந்த ஊர் ஜும்மா பள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதை ஹக்கீம் மறக்கக் கூடாது. ஜும்மா பள்ளிகளை முன்னிறுத்தியே ஹக்கீம் வாக்குறுதி வழங்கினார், அதற்கே இப்போது மாறு செய்கின்றார். “போராளிகளே புறப்படுங்கள், ஒதுங்கி நிற்க நேரமில்லை.”

