ஹம்பாந்தோட்டயில் கைது செய்யப்பட்ட 28 பேரையும் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்ட மஜிஸ்ட்ரேட் மஞ்ஜுல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் (06) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நேற்றிரவு 10.30 மணிக்கு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வீரவில பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர், சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு சட்டத்துறை வைத்திய அதிகாரி காணப்படாததனால் கைது செய்யப்பட்டவர்கள் திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தையும் முடித்துக் கொண்டு மஜிஸ்ட்ரேட் நீதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்துக்கு சென்று ஒப்படைக்கும் போது இரவு 11.30 மணியாக காணப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது. இதன்பிறகு கைது செய்யப்பட்டவர்கள் தங்கல்ல சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.