தகுதியானவர்கள் பலர் இருக்க அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவரை வடக்கு மாகாணப் போக்குவரத்துச் சபையின் முகாமையாளராக நியமித்துள்ளீர்கள். அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் இருக்கிறார். அப்படிச் செயற்பட முடியுமா?
இவ்வாறு நாடாளுமன்றில் விசனத்துடன் கேள்வி எழுப்பினார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வடக்கு மாகாண போக்குவரத்துச் சபையின் பிராந்திய முகாமையாளராக அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் அந்தப் பதவியை வகிக்கக் கூடிய எத்தனையோ நபர்கள் உள்ளனர். அவர்களுக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய அலுவலகத்துக்குச் செல்லாது வவுனியாவில் புதிதாக அலுவலகத்தை அமைத்து அங்கு தான் இருக்கின்றார். இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்த முகாமையாளர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளார். போக்குவரத்துச் சபையின் பிராந்திய முகாமையாளர் எவ்வாறு கட்சியொன்றின் அமைப்பாளராக இருக்க முடியும்.
மகிந்த ஆட்சிக் காலத்தில் தேர்தல்களின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் தமது கட்சி வெற்றி பெறுவதற்காக அரசின் உயர் பதவிகளில் தமக்கு வேண்டியவாறு மாற்றங்களைச் செய்தார்.
இயலுமானவரையில் தமக்குச் சார்பான அதிகாரிகளை நியமித்து தேர்தலில் வெற்றிகளைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதும் தமிழ் மக்கள் அதற்குரிய பாடத்தைப் புகட்டியிருந்தனர்.
அரச சேவையில் உள்ள ஒருவருக்கு அமைப்பாளர் பதவியை வழங்குவது பொருத்தமற்றது. முகாமையாளர் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.
அவர் முகாமையாளர் பதவியில் இருந்து கொண்டு அந்தப் பதவியை வகிப்பதால் அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்காக அதிகாரங்கள் பிரயோகிக்கப்படும் ஆபத்தே உள்ளது. அது தொடர்பில் தாங்கள் கவனம் எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் -– என்றார்.