ஆப்பிள் நிறுவன ஐபோன்கள் அந்நிறுவன பிராண்ட் மட்டுமின்றி அவற்றின் உறுதித்தன்மைக்கும் பெயர்பெற்றதாகும். அவ்வாறு ஐபோன்களின் உறுதித் தன்மையை நிரூபிக்கும் சம்பவம் லாஸ் வேகாஸ் துப்பாக்கிசூட்டில் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 59 பேர் பிரதாபமாக உயிரிழந்ததோடு 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமுற்றோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சார்ந்த விசாரணை ஒருபுறம் நடைபெற்று வருகிறது. அதேவேளையில், சம்பவத்தில் அரங்கேறிய வீரதீர செயல்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. அந்த வகையில் துப்பாக்கி சூட்டின் போது பாதிரியார் ஒருவர் 30 பேரை காப்பாற்றியிருக்கிறார். மேலும் பலர் காயமுற்றோருக்கு ரத்த தானம் செய்ய வரிசையில் முன்வந்துள்ளனர்.
அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த கொடூர தாக்குதலில் உயிர்பிழைத்த பெண்மணி தனது ஐபோனிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழக்க வேண்டிய பெண்மணி தான் வைத்திருந்த ரோஸ் கோல்டு நிற ஐபோன் தன் உடலில் தோட்டா நுழையாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஐபோன் மூலம் உயிர்பிழைத்த பெண் சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை என்றாலும், தாக்குதலில் உயிரை காப்பாற்றிய ஐபோனின் புகைப்படத்தை அவர் கார் ஓட்டுனரிடம் காண்பித்திருக்கிறார். தற்போதைய தாக்குதல் மட்டுமின்றி பலமுறை ஐபோன் மூலம் பலர் உயிர்பிழைத்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
தாக்குதலில் பலியான 59 பேருக்கும் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலானியா, துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.