11 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை முன்பாக நாளை முற்பகல் 10 மணியளவில் போராட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் பேரவை அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தொற்று நோய்கள் மூலமான இறப்புகளைத் தடுப்பதற்கு அதியுச்ச தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுக் கட்டடத்தில் உள்ள பிரசவ விடுதி மற்றும் குழந்தைகள் விடுதி என்பன தனியான கட்டடத் தொகுதிக்கு மாற்றப்படவேண்டும்.
சிறப்புக் கவனிப்புத் தேவைப்படும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு (பேபி றூம்) அருகே உள்ள சுவாச நோய் சிகிச்சை நிலையம் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்.
அதிதீவிர சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களுக்குத் தனியான அலகு ஏற்படுத்த வேண்டும்.
தீவிபத்து மற்றும் தீக்காயம் பட்ட நோயாளர்களுக்குத் தனியான நோய்த் தொற்று ஏற்படாத வகையில் முழுமையான பாதுகாப்பான தனியான ஒரு அலகு ஏற்படுத்தப்படவேண்டும்.
தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை விடுதிகளைத் தனித்தனிக் கட்டடங்களில் அமைக்க வேண்டும்.
நோயாளர்களை மருத்துவமனை ஊழியர்கள் அன்போடும், கனிவோடும் நடத்த வேண்டும்.நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும்.
மருத்துவமனையில் நிகழும் இறப்புகள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளின் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
நீதித்துறை விசாரணைகள் காலதாமதம் இன்றி மேற்கொள்ளப்பட்டுக் குற்றம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதன்மூலமாக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மாதர் சங்கங்கள், வர்த்தக அமைப்புகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள் அனைவரையும் கலந்து முழுமையான ஆதரவைத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அரச மருத்துவமனைகள் தரமிழந்து போவதென்றால் அவற்றை நம்பியிருக்கும் ஏழைகளின் நிலை என்ன? என்றுள்ளது.