‘மெர்சல்’ படத்தின் ஜி.எஸ்.டி வசனம் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்தப் படத்தின் சில காட்சிகள் நீக்கவேண்டும் என பா.ஜ.க-வினர் கோரினர்.
இந்நிலையில், படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார் படத்தின் எடிட்டர் ரூபன்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பல சர்ச்சைகளைக் கடந்து வந்துள்ளது. மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி, பணமதிப்பு இழப்பு தொடர்பான வசனங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதாகக் கூறி அந்தக் காட்சிகளை நீக்கச் சொல்லி தமிழக பா.ஜ.க-வினர் மிரட்டல் விடுத்தனர்.’மெர்சல்’ படத்திற்கு ஆதரவாகவும், பா.ஜ.க-வினருக்கு எதிராகவும் குரல்கள் எழுந்தன. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த், கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் பா.ஜ.க-வினரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் வசனம் நீக்கக் கோருவது தொடர்பாக ‘நாந்தான்டா இந்தப் படத்துக்கு எடிட்டரு..’ என ட்வீட் செய்திருந்தார் படத்தின் எடிட்டர் ரூபன். படத்தின் எடிட்டர் ரூபனிடம் பேசினோம்.
‘மெர்சல்’ வசனங்களை நீக்கக் கோருவது பற்றி ‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசுவது ஒரு நேர்மையான டாக்டரின் கருத்து. அதை நீக்கச் சொல்வது திரைப்படங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சி. சினிமா எனும் பொழுதுபோக்கு தளத்தை பொழுதுபோக்குத் தளமாகத்தான் பார்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி பலர் எதிர்ப்புத் தெரிவிப்பது சினிமாவுக்கு கெடுதல் தான்.
இந்த சர்ச்சையால் படத்திற்கு பாசிட்டிவ்வா நெகட்டிவா? இந்த சர்ச்சையால் படத்திற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் கலந்துதான் வந்திருக்குனு நெனைக்கிறேன். கடந்த மூன்று நாட்களாக படத்தைப் பார்க்கிறவங்களோட எண்ணிக்கை குறையாம இருக்கு. இது பா.ஜ.க-வினர் காட்சிகளை நீக்கச் சொன்னதாலதான்னு சொல்லமுடியாது. படத்தோட ஃபீட்பேக் மக்களுக்குப் போய்ச் சேர்ந்தா தியேட்டரில் கூட்டம் வரத்தான் செய்யும்.
ஜி.எஸ்.டி வசனம் பற்றிய அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டு பற்றி? ‘ராஜா ராணி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், ‘டைவர்ஸ் வாங்கிட்டுப் பிரிஞ்சிடாம சேர்ந்து வாழுங்க’னு மெசேஜ் சொல்றோம். அதனால், நாட்டில் யாரும் டைவர்ஸே வாங்காமப் போயிடுவாங்களா என்ன? ஒரு நல்ல கருத்தை பெரும்பாலான மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிற ஊடகம்தான் சினிமா. ஜி.எஸ்.டி பற்றிய வசனமும் அப்படித்தான் படத்தில் வருது. அதைப் பெரிசாக்கி நீக்கச் சொல்றது நல்ல விஷயம் கிடையாது.
நீளம் கருதி குறைக்கப்பட்ட காட்சிகள் வெளியாகுமா? படம் ரொம்ப நீளமா போனதால் சில முக்கியமான காட்சிகளையும் கட் பண்ண வேண்டியதா இருந்துச்சு. அந்தக் காட்சிகளை கட் பண்ணினதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படலை. ஆனால், படத்திற்காக எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகளையும் அதிகாரப்பூர்வமாக யூ-ட்யூபில் வெளியிடும் ஐடியாவில் இருக்கிறோம்.
கட் ஆன காட்சிகளின் வீடியோ எப்போ வரும்? ‘மெர்சல்’ படம் ரசிகர்களின் ஆதரவோடு ஹவுஸ்ஃபுல்லா போய்க்கிட்டு இருக்கு. படம் நல்லா போய்க்கிட்டு இருக்கும்போதே அந்த வீடியோக்களை வெளியிடவேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சநாட்களுக்கு அப்புறம் அந்த வீடியோக்களை அதிகாரப்பூர்வமா வெளியிடுவோம். உங்க எடிட்ல வந்த படத்தின் காட்சிகளை இப்போ நீக்கச் சொல்றது பற்றி உங்க கருத்து? இதில் நான் என்ன சொல்றது. தியேட்டர்களுக்கு என இருக்கும் மதிப்பின்படி சென்சார் போர்டு சான்றிதழ் வாங்கித்தான் படம் ரிலீஸ் ஆகுது. அதற்கு அப்புறமும் இப்படி அரசியல் கட்சிகள் படத்திற்கு சிக்கலை ஏற்படுத்துறது தவறு.