நான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இணையும்போது இரண்டு மாவட்டங்களுக்காவது அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் அதற்கு அவர்களும் இணங்கினார்கள் என்றாலும் இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் தரவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற பாராளுமன்ற சிரேஷ்ட உரை பெயர்ப்பாளர் எம்.எம் ராஸிக் எழுதிய ஹெம்மாத்தகம முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு எனும் நூலின் அறிமுக விழா நேற்று கொழும்பில் உள்ள ஜம்மியதுஸ் சபாப் கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த நாட்டில் 10 வீதமான முஸ்லிம்கள் இருந்தும் 25 மாவட்டங்களில் 2 மாவட்டங்களுக்குக் கூட முஸ்லிம் அரசாங்க அதிபர் இல்லாமை வருத்தமளிக்கிறது. ஜனாதிபதிக்கு இரண்டாவது ஞாபகப்படுத்தல் கடிதமும் அமைச்சர் வஜிரவுக்கு ஐந்தாவது கடிதமும் அனுப்பிவிட்டேன் ஆனாலும் இன்னும் பதில்தான் கிடைக்கவில்லை.
கடந்த காலங்களில் ஒரு முஸ்லிம் மாத்திரமே அரசாங்க அதிபராக இருந்துள்ளார். இந்த நிலை மாற்றப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி உட்பட உயரதிகாரிகள், இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.