இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த சீசனில் ரன் வேட்டையாடி எதிரணிக்கு சவால் விடுப்பதுடன் ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கே இந்தத் தொடர் சாதகமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
அதேவேளையில் தொடர்ச்சியான வெற்றிகளை பெறத் தவறினாலும் நியூஸிலாந்து அணி அபாயகரமானதாகவே திகழுக்கூடும். உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் 4-1 என பந்தாடிய நிலையில் இந்திய அணி தற்போது நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. நன்கு செட்டிலான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு கூட்டணி நியூஸிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கக் கூடும்.
இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டித் தொடர்களை (மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா) வென்ற உற்சாகத்தில் உள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் வான்கடே மைதானத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்திருந்தது.
கடந்த 2009-10ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டித் தொடரை 4-2 என இழந்த இந்திய அணி அதன் பின்னர் சொந்த மண்ணில் நடைபெற்ற 16 இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் தலா ஒரு முறை மட்டுமே தொடரை பறிகொடுத்துள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அதேபோல் தொடக்க வீரரான ஷிகர் தவணும் அணியில் இடம் பெறவில்லை. எனினும் இந்திய அணி தொடரை வென்றது பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
துணை கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரை சதம் உட்பட 296 ரன்களும், கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் அஜிங்க்ய ரஹானே 4 அரை சதங்களுடன் 244 ரன்களும், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 222 ரன்களும் குவித்தனர். மூத்த வீரரான மகேந்திர சிங் தோனியும், இக்கட்டான நேரத்தில் தனது பங்களிப்பை திறம்பட வழங்கினார். அதே தீவிரத்துடன் இவர்கள், பேட்டிங்குக்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் நேர்த்தியாக செயல்பட்டால் எதிரணியினரால் கட்டுப்படுத்துவது கடினம் தான்.
சுழற்பந்து வீச்சில் தாக்குதல் பாணியை கடைபிடிக்கும் குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் ஆகியோருடன் ஆல்ரவுண்டராக அக்சர் படேலும் பலம் சேர்க்கிறார். இதபோல் வேகக் கூட்டணியான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களுக்கும், இறுதி கட்ட ஓவர்களிலும் தொல்லை கொடுக்க தயாராக உள்ளனர். நியூஸிலாந்து அணியின் பேட்டிங் மூத்த வீரர்களான ராஸ் டெய்லர், வில்லியம்சன், மார்ட்டின் கப்தில் மற்றும் டாம் லதாம் ஆகியோரையே பெரிதும் சார்ந்துள்ளது.
வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த ராஸ் டெய்லர், டாம் லதாம் ஆகியோரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி வேகக் கூட்டணியும், மிட்செல் சான்டர், இஸ் சோதி சுழல் கூட்டணியும் இந்திய பேட்ஸ்மேன் களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடும். இந்திய அணி முதன்முறையாக ஐசிசி கடந்த மாதம் அமல்படுத்திய புதிய விதிமுறைகளுடன் இந்தத் தொடரை அணுகுகிறது என்பது குறிப்பிடத்க்கது.
அணிகள் விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீவ் யாதவ், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.
நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லதாம், ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், மேட் ஹென்றி, காலின் முன்ரோ, காலின் டி கிராண்ட்ஹோம், டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்டர், டிம் சவுத்தி, ஜார்ஜ் வோர்க்கர், இஸ் சோதி.