ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம் அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் மியன்மார் மற்றும் பங்களாதேஷுக்கு இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது.
மியன்மார் ரக்கைன் மாநிலத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் வன்முறைகளில் 600,000 க்கும் அதிகமான ரொஹிங்கிய மக்கள் எல்லை கடந்து பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றிருக்கும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மியன்மார் இராணுவம் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவதாக பங்களாதேஷ் மற்றும் ஐ.நா குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில் மியன்மார் தலைநகர் நைபிடோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரொஹிங்கிய வருகையை நீறுத்தவும், அகதிகளை திரும்ப பெற்றுக்கொள்ளவும் மியன்மார் இணங்கியதாக பங்களாதேஷ் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் அகதிகளை திரும்ப பெறுவது குறித்து மியன்மார் கடும் நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரகைன் மாநிலத்துடனான பூர்வீக தொடர்பை நிரூபிக்கும் அகதிகளையே அனுமதிக்க மியன்மார் எதிர்பார்த்துள்ளது.
மியன்மார் உள்துறை அமைச்சைச் சேர்ந்த டின் மியின் கூறியதாவது, “நாம் கூர்மையாக ஆராய்ந்த பின்னரே (அகதிகளை) அனுமதிப்போம். அவர்கள் உண்மையிலேயே மவுங்டோ மற்றும் புதிடொங்கில் குடியிருந்தவர்களா என்பது பற்றி நாம் ஆராய்வோம்” என்றார்.
குடியுரிமை மறுக்கப்படும் ரொஹிங்கிய மக்களுக்கு தமது உரிமையை நிரூபிக்க போதிய ஆவணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.